தி ஹண்ட்ரட் 2023: ஷார்ட், ப்ரூக் காட்டடி; சதர்ன் பிரேவை வீழ்த்தி சூப்பர்சார்ஜர்ஸ் அபார வெற்றி!

Updated: Sun, Aug 06 2023 23:03 IST
தி ஹண்ட்ரட் 2023: ஷார்ட், ப்ரூக் காட்டடி; சதர்ன் பிரேவை வீழ்த்தி சூப்பர்சார்ஜர்ஸ் அபார வெற்றி! (Image Source: Google)

இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் என்றழைக்கப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணியை எதிர்த்து நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கு டாம் பாண்டன் - மேத்யூ ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடிய மேத்யூ ஷார்ட் அரைசதம் கடந்தார். 

அதன்பின் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 73 ரன்களை எடுத்த மேத்யூ ஷார்ட் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் பாண்டான் 44 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டேவிட் வைஸ்  ஒரு ரன்னுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதற்கிடையில் மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய ஹாரி ப்ரூக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரி என 63 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைக் குவித்தது. 

 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே 15 ரன்களுக்கும், ஃபின் ஆலன் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் இணைந்த ஃபின் ஆலன் - லுயிஸ் டி ப்ளூய் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். பின் ஆலன் 33 ரன்களிலும், டூ ப்ளூய் 28 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய டிம் டேவிட்டும் 19 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரி என 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகள் முடிவில் சதர்ன் பிரேவ் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சூப்பர்சார்ஜர்ஸ் தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் சதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை