இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் ஆடவர் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பர்மிங்ஹாம் ஃபீனிங்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் எய்த சதர்ன் பிரேவ் அணியில் தொடக்க வீரர் அலெஸ்க் டேவிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - லூயிஸ் டூ ப்ளூய் ஆகியோர் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இதில் இருவரும் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் லூயிஸ் டூ ப்ளூய் 39 ரன்களிலும், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 43 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் கிறிஸ் ஜோர்டன் 20 ரன்களை அடித்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறினர். இதனால் இன்னிங்ஸ் முடிவில் சதர்ன் பிரேவ் அணியானது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் மில்னே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பென் டக்கெட் 7 ரன்களுக்கும், கேப்டன் மொயீன் அலி 24 ரன்களுக்கும், ஜேமி ஸ்மித் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் - ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் லியாம் லிவிங்ஸ்டோன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுபக்கம் ஜேக்கப் பெத்தேல் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேன் மௌஸ்லி, பென்னி ஹௌல் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 55 ரன்களைச் சேர்த்திருந்த லியாம் லிவிங்ஸ்டோனும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணியும் இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் பிரேவ் அணி தரப்பில் தைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மேலும் இரு அணிகளின் ஸ்கோரும் சமமாக இருந்ததால், இப்போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது. 

பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணியானது 6 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சதர்ன் பிரேவ் அணியானது 4 பந்துகளிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு மிக்கிய பங்காற்றிய ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News