தி ஹண்ரட் மகளிர் : பர்மிங்ஹாம் பீனிக்ஸை வீழ்த்தியது லண்டன் ஸ்பிரிட்!
தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் லீக் ஆட்டத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி, லண்டன் ஸ்பிரிட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற லண்டன் ஸ்பிரிட் மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பர்மிங்ஹாம் அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக எவ்லின் ஜோன்ஸ் 47 ரன்களையும், ஏமி ஜோன்ஸ் 33 ரன்களையும் சேர்த்தனர். லண்டன் அணி தரப்பில் டோட்டின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய லண்டன் அணிக்கு நவோமி டட்டானி அதிரடியான தொடக்கத்தை தந்தார். 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
அதன்பின் கேப்டன் ஹீத்தர் நைட், தீப்தி சர்மா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் லண்டன் ஸ்பிரிட் அணி 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.