விராட் கோலியை சந்தித்த ஜோஷுவா டா சில்வாவின் தாய்; வைரல் காணொளி!
இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் முகாமிட்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 26 பந்துகளில் 11 பவுண்டரிகள் உடன் 121 ரன்கள் விராட் கோலி எடுத்துக் கொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் சேர்த்தது.
இந்திய அளவில் நான்காவது வீரராக 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி, சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் சதம் அடித்து 500ஆவது சர்வதேச போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். விராட் கோலிக்கு இந்த சதம் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இருபத்தி ஒன்பதாவது சதமாகவும், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 76 ஆவது சதமாகவும் பதிவாகி இருக்கிறது.
மேலும் வெளிநாட்டு மண்ணில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்து, அது குறித்தான சர்ச்சைக்குப் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இந்நிலையில் விராட் கோலி பேட்டிங் செய்யும்பொழுது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வா அவருடன் தொடர்ந்து நல்ல முறையில் உரையாடிக் கொண்டே இருந்தார்.
விராட் கோலி விளையாடும்போது தன் தாய் வந்திருப்பதாகவும், அது தான் விளையாடுவதை பார்க்க வரவில்லை என்றும், விராட் கோலி விளையாடுவதை பார்க்க வந்திருப்பதாகவும், அவர் விராட் கோலி இடம் கூறிக் கொண்டிருந்தார். இது நேற்று சமூக வலைதளங்களில் வைரலான ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் போட்டி முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பரின் தாய் விராட் கோலியை சந்தித்த நிகழ்வு நடைபெற்றது.
அது மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாகவும் இருந்தது. விராட் கோலியை சந்தித்த பின்பு அவரது தாய் சந்தோசத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் துடைத்துக் கொள்ளும் அளவுக்கு நிகழ்வு இதயத்திற்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது. இக்காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விராட் கோலி சந்தித்து பின் பேசிய அவர், “நான் உன்னைப் (ஜோஷுவா டி சில்வா) பார்க்க வரவில்லை. ஏனெனில் உன்னை நான் தினமும் பார்க்கிறேன். அதனால் விராட் கோலியை பார்க்க மட்டுமே வருகிறேனென’ எனது மகனிடம் கூறினேன். இப்போதுதான் விராட் கோலியை முதன்முறையாக சந்திக்கிறேன். அவர் அழகான அற்புதமான மனிதர். அவரும் எனக்கு மகன் போலதான். விராட் கோலிக்கு அழகான மனைவியும் இருக்கிறார்கள். விராட் கோலி திறமையான கிரிக்கெட்டர். விராட் கோலி போலவே எனது மகனும் சிறப்பாக விளையாடுவாரென நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.