போலண்ட் பந்துவீச்சில் கூலாக சிக்சர் அடித்த ரூட்; வைரல் காணொளி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் முதல் நாள் அன்று சதம் அடித்து அசத்தினார் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட். முக்கியமாக அவரது இன்னிங்ஸில் அவர் விளையாடிய ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது. இதில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் பங்கு சற்று அதிகம். இருவரும் இணைந்து 121 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரூட், 152 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
களத்தில் செட் ஆகி விளையாடிக் கொண்டிருந்த ரூட், ஆஸ்திரேலியா பவுலர் ஸ்காட் போலண்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை தேர்ட் மேன் திசையில், பவுண்டரி லைனுக்கு வெளியே அனுப்பி மிரட்டினார். அந்த ஷாட்டை மிகவும் கூலாக விளையாடி இருந்தார் ரூட்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் ஃபேப் 4 பேட்ஸ்மேன்களில் ரூட் உள்ளார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இதுவரை 30 சதங்கள் பதிவு செய்துள்ளார். இதில் நேற்று பதிவு செய்த சதமும் அடங்கும்.