ஒலிம்பில் ஒரே ஆட்டத்தில் தான் சாம்பியனை தேர்வு செய்து பதக்கங்களை வழங்குவார்கள் - பாட் கம்மின்ஸ் பதிலடி!
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. இப்போட்டியில் 444 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக அஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. இதைதொடர்ந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 234 ரன்னில் ஆல் அவுடாகி 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றதோடு, அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையையும் படைத்தது.
இந்தப் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து ரோஹித் சர்மா கூறுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக போதுமான அவகாசம் கிடைக்கவில்லை. 2 ஆண்டுகளாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறோம். இறுதிப்போட்டியை ஒரேயொரு போட்டியாக நடத்தி வெற்றியாளரை தீர்மானிப்பது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒரேயொரு இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு பதிலாக, 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தி சாம்பியனை தேர்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
ரோஹித் சர்மாவின் கருத்து குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்மின்ஸ், “நாங்கள் ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுவிட்டோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக மட்டுமல்ல, 16 போட்டிகள் கொண்ட தொடராக கூட நடத்தலாம்.
ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரேயொரு ஆட்டத்தில் தான் சாம்பியனை தேர்வு செய்து பதக்கங்களை வழங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார். பேட் கம்மின்ஸ்-ன் இந்த பதில் ரோஹித் சர்மாவுக்கு சரியான பதிலடியாக அமைந்துள்ளது. தோல்வியடைந்துவிட்டு காரணங்கள் சொல்லாமல், வென்றுவிட்டு கொண்டாடுங்கள் என்று சொல்வதாக கம்மின்ஸின் பதில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.