இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்திய இந்திய அணியானது, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சியளித்தது. அதிலும் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அதேசமயம் இந்த ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான இத்தோல்வியின் மூலம் இந்திய அணி மீதான விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணி வீரர் சோபிக்க தவறியது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் ரியான் பராக்கின் பந்துவீச்சு திறன் இந்திய அணிக்கு மிகப்பெரும் சாதகமாக அமைந்துள்ளது என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “இலங்கைக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி சில ஆல்-ரவுண்டர்களை உருவாக்கியுள்ளதுடன், அவர்களைக் கொண்டு தைரியமாக விளையாடியது உண்மையிலேயே பாராட்டுக்குறிய விசயமாக பார்க்கிறேன். மேலும் கடைசி போட்டியின் போது அறிமுக வீரராக களமிறங்கிய ரியான் பராக் தனது பந்துவீச்சு திறமையால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளார். அது இந்திய அணிக்கு கிடைத்த கூடுதல் சாதகமாக பார்க்கிறேன்.
அது தவிர, அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் இந்திய அணிக்கு மிகப்பெரும் சாதகத்தைக் கொடுத்துள்ளது. ஏனெனில் பவர்பிளேயில் அவர் தொடங்கும் விதம், இந்த தொடரில் அவர் பேட்டிங் செய்த விதம் என அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமானவையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியது போலவே தனது அறிமுக போட்டியில் விளையாடிய ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதேசமயம் இந்திய அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி எதிரணியை எப்போதும் அழுத்ததிலேயே வைத்திருந்தார். மேற்கொண்டு இத்தொடரில் மூன்று போட்டிகளிலும் விளையாடிய ரோஹித் சர்மா முதல் போட்டியில் 58, இரண்டாவது போட்டியில் 64 மூன்றாவது போட்டியில் 35 என மொத்தம் 157 ரன்களை 52.33 என்ற சராசரியில், 141.44 என்ற ஸ்டிரைக் ரேட்டியில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.