நடப்பு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டது - சைமன் டௌல்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கின. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 20.50 கோடி என்ற வரலாற்றின் உச்சகட்ட தொகை கொடுத்து வாங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை 24.75 கோடிகள் என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கியது. மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக இருக்கும் சென்னை, மும்பை அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை சற்று குறைந்த விலையிலேயே வாங்கியது.
குறிப்பாக எம்எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 2023 உலகக் கோப்பையில் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் (523) அடித்த வீரராக உலக சாதனை படைத்த ரச்சின் ரவீந்தராவை 1.80 கோடிக்கும், இந்திய வீரர் ஷார்துல் தாக்கூரை 4 கோடிக்கும் வாங்கியது. அதனால் ராயுடுவின் இடத்தை நிரப்புவதற்காக மற்றொரு நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சேலை போட்டி போட்டு 14 கோடிக்கு சென்னை வாங்கியது ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் தரமான பவுலிங்கை கொண்ட இந்தியாவுக்கு எதிராக அவர் 2 போட்டிகளில் 2 சதங்கள் அடித்து மொத்தம் 556 ரன்களை விளாசி இந்திய மைதானங்களில் தம்மால் அசத்த முடியும் என்பதை காண்பித்தார். இந்நிலையில் ஒரு வீரருக்காக 20 கோடிகளை இறைத்த அணிகளுக்கு மத்தியில் மிட்சேல், தாக்கூர், ரவீந்திரா ஆகிய 3 தரமான வீரர்களை 20 கோடிக்குள் வாங்கிய சென்னை ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரச்சின் ரவீந்தரா, ஷர்துல் தாக்கூர், டார்ல் மிட்சேல் ஆகிய 3 பேரை 20 கோடிக்குள் வாங்கியதை நினைத்துப் பாருங்கள். அந்த 3 பேருமே ஆல் ரவுண்டர்களாக அசத்தக்கூடியவர்கள். குறிப்பாக தாக்கூர் நல்ல ஆல் ரவுண்டர் என்பதை மறந்து விடாதீர்கள். அவர் உங்களுக்கு பேட்டிங், பவுலிங்கில் அசத்தி வெற்றியை பெற்றுக் கொடுப்பார்.
அதிலும் குறிப்பாக தோனி தலைமையில் அவர் நன்றாக செயல்படுவார். இங்கே சில வீரர்கள் மட்டுமே சென்னை அணிக்கு சென்று நல்ல வீரர்களாக வெளி வந்துள்ளார்கள். அது போன்ற வீரராக நாம் தாக்கூரை பார்க்கிறோம். மிட்சேல் வாங்கப்பட்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிகவும் திறமை கொண்ட வீரர். அவருடைய திறமையான செயல்பாடுகளை இன்னும் ஐபிஎல் தொடர் பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார்.