கேஎல் ராகுல் இந்த அரைசதம், சதம் விளாசியதற்கு சமமாகும் - சுனில் கவாஸ்கர்

Updated: Wed, Dec 27 2023 11:03 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் விளாசிய அரைசதம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறிய சூழலில், ஒற்றை ஆளாக நின்று போராடி அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.

அதிலும் பும்ரா மற்றும் சிராஜ் இருவருக்கும் ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் கேஎல் ராகுல் பேட்டிங் செய்து வருவது அவரின் முதிர்ச்சியை காட்டுகிறது. ஏற்கனவே 2021ஆம் ஆண்டு நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கேஎல் ராகுல், மீண்டும் மற்றொரு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். முதல் நாளிலேயே இந்திய அணி 200 ரன்களை கடந்ததற்கு கேஎல் ராகுலின் ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. 

இதுகுறித்து பேசிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், “கேஎல் ராகுல் இன்றைய ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது என்றே சொல்லலாம். என்னை பொறுத்தவரை அவரின் இந்த அரைசதம், சதம் விளாசியதற்கு சமமாகும். அவர் சதம் அடித்தாலும், அடிக்கவில்லை என்றாலும் நான் சதம் அடித்ததாகவே பார்ப்பேன்.

கால்களை நகர்த்தி தென் ஆப்பிரிக்கா பவுலர்களை எதிர்கொண்டது, உயரத்தின் மூலமாக பவுன்சர்களை தரையோடு அடித்து ரன்கள் சேர்த்து, தேவையில்லாத பந்துகளை கீப்பரிடம் விட்டது என்று கேஎல் ராகுல் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடிவிட்டார். ஆட்டத்தின் எந்த சூழலிலும் அவரின் பேலன்ஸை இழக்கவில்லை. அதுதான் இங்கு முக்கியமானது.

கேஎல் ராகுலிடம் திறமை இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக சீராக வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் அடைந்த காயத்திற்கு பின்னான 6 மாத ஓய்வு, கேஎல் ராகுல் மொத்தமாக மாற்றிவிட்டது. அவரை இப்படி தான் பார்க்க விரும்பினேன். அவரின் இன்னிங்ஸை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை