இங்கிலாந்து எத்தனமாக விளையாடி இந்தியாவை தோற்கடிக்கும் - மைக்கேல் வாகன்!

Updated: Fri, Oct 27 2023 11:19 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும் இந்தியாவுக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே நியூசிலாந்திடம் அடி வாங்கிய இங்கிலாந்து அதன் பின் கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்து புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது.

அத்துடன் தென் ஆப்பிரிக்காவிடம் மும்பையில் சரமாரியாக அடி வாங்கி படுதோல்வியை சந்தித்த அந்த அணி நேற்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையிடமும் மண்ணை கவ்வியது. குறிப்பாக இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 156 ரன்களுக்கு சுருண்டது.

குறிப்பாக ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன் கேப்டன் ஜோஸ் பட்லர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக லகிரு குமாரா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 157 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிஷங்கா 77, சமரவிக்ரமா 65 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்று கொடுத்தனர்.

அதனால் டேவிட் வில்லி 2 விக்கெட்டுகள் எடுத்தும் இதுவரை களமிறங்கிய 5 போட்டிகளில் 1 வெற்றி 4 தோல்விகளை பதிவு செய்துள்ள இங்கிலாந்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதனால் எஞ்சிய 4 போட்டிகளில் வென்றாலும் மோசமான ரன்ரேட் கொண்டிருப்பதன் காரணமாக அந்த அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெறாமல் கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை தவறவிட்டு லீக் சுற்றுடன் வெளியேறுவது 90 சதவீதம் உறுதியாகியுள்ளது.

ஏனெனில் அடுத்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றாலும் கூட மோசமான ரன்ரேட்டை கொண்டிருக்கும் அந்த அணி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற இதர அணிகளின் தோல்வியை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் இங்கிலாந்து தங்களுடைய அடுத்த போட்டியில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வலுவான இந்தியாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் அரையிறுதியில் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போயுள்ளதால் பரவாயில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அடுத்ததாக இந்தியாவை அடித்து நொறுக்கும் என்று ட்விட்டரில் மறைமுகமாக பதிவிட்டுள்ளார். அதாவது இனிமேல் தோற்பதற்கு எதுவுமில்லை என்ற சூழ்நிலையில் இங்கிலாந்து எத்தனனமாக விளையாடி இந்தியாவை தோற்கடிக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார். ஆனால் அதற்கு அக்டோபர் 29ஆம் தேதி எங்களிடம் தோற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதற்கு தயாராகுங்கள் என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை