இங்கிலாந்து அடிவாங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - டிம் பெயின்!

Updated: Fri, Oct 06 2023 15:36 IST
இங்கிலாந்து அடிவாங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - டிம் பெயின்! (Image Source: Google)

நேற்று ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியே வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக பலராலும் கணிக்கப்பட்டது. நேற்றைய இங்கிலாந்து பிளேயிங் லெவனும் அப்படித்தான் இருந்தது.

அதே சமயத்தில் உலகக்கோப்பை என்று வந்தால் பல பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காகவே விளையாட வரும் நியூசிலாந்து மீது கணிசமான ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு உலக கோப்பையிலும் ஏதாவது ஒரு முக்கிய அணியை வெளியே அனுப்பி வைப்பதுதான் நியூசிலாந்தின் முக்கிய வேலை.

இந்த வகையில் நேற்று விதிவிலக்கு இல்லாமல் நியூசிலாந்து இங்கிலாந்துக்கு மிகச்சிறப்பான அதிர்ச்சியை கொடுத்தது. இதை அதிர்ச்சி என்று சொல்வதை விட மிக ஒழுக்கமான விளையாட்டின் மூலம் தோல்வியை பரிசாக இங்கிலாந்து கொடுத்தது என்று சொல்ல வேண்டும். அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் இல்லாமலும், பவுலிங் யூனிட்டில் முக்கியமான சுழற் பந்துவீச்சாளர் சோதி இல்லாமலும் களம் கண்டு, இருப்பதைக் கொண்டு மிகச் சிறப்பாக பந்துவீச்சில் செயல்பட்டு இங்கிலாந்தை 282 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது அருமையான ஒரு விஷயம்.

அதே சமயத்தில் கான்வே மற்றும் ரவீந்தரா பேட்டில் வெளிப்படுத்திய ஆட்டம் உலகத்தரம் வாய்ந்தது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இரண்டாம் பகுதியில் எந்த இடத்திலும் பந்து வீச்சில் நிமிர முடியாத அளவுக்கு பேட்டால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் களத்தை ஆண்டார்கள். ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து நியூசிலாந்து இடம் சிக்கி தோற்றது.

இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கூறும்போது “அவர்கள் இங்கிலாந்தை அடித்து நொறுக்கினார்கள். நாங்கள் நேற்று இரவு 10 மணி அளவில்தான் ஆலன் பார்டர் மைதானத்தில் இருந்து வந்தோம். இதனால் நான் தூங்கி விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் போட்டியை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. இங்கிலாந்து மைதானத்தில் முழுவதும் சுற்றி வளைக்கப்படுவதை நான் பார்த்தேன். பெரும்பாலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியாக இதை பார்த்திருப்பார்களோ அப்படியே நானும் பார்த்தேன். இது தொடரும் என்று நம்புகிறேன்.

பனிப்பொழிவு இந்தியாவில் ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.அங்கு வேகமாக பந்து வீசினால் தற்காப்பது கடினம். மைதானங்கள் மிகவும் சிறியவை. ஆடுகளங்கள் தட்டையானவை. மார்க் வுட் 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசிக்கொண்டு இருந்தார். பந்து பேட்டில் பட்டு சறுக்கி சென்று கொண்டிருந்தது. மேலும் பந்து பேட்டில் நன்றாக பட்டாலும் சரி படாவிட்டாலும் சரி, பீல்டர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு பறந்தது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை