கிறிஸ் கெயில் வாழ்நாள் சாதனையை சமன்செய்த டிம் சௌதீ!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - வில் யங் சிறப்பன தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில் வில் யங் 42 ரன்னிலும், டாம் லேதம் 63 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சனும் 44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், கிளென் பிலீப்ஸ், மேட் ஹென்றி உள்ளீட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய டிம் சௌதீ தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மிட்செல் சான்ட்னர் 50 ரன்களுடனும், வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார்.
அதன்படி இப்போட்டியில் டிம் சௌதீ 3 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கேயில் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக கிறிஸ் கெயில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 98 சிக்ஸர்களை விளாசி 4ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் டிம் சௌதீ 107 போட்டிகளில் 98 சிக்ஸர்களை விளாசி அவரின் சாதனையை சமன்செய்துள்ளார்.
அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 133 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிராண்டான் மெக்கல்லம் 107 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 100 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் இப்போட்டியுடன் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் எனும் பெருமையை டிம் சௌதீ பெறுவதுடன், ஆடம் கில் கிறிஸ்டின் சாதனையையும் சமன்செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.