சஹால் - குல்தீப் ஆகியோர் மீண்டும் இணைந்து விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்

Updated: Wed, Jan 26 2022 15:12 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 எனவும் ஒருநாள் தொடரை 0-3 எனவும் தோற்று நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸுக்கு அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கிறது.

வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வருகிறார் அஸ்வின். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் முழுமையாக ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி - 5.25. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 ஆட்டங்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 5.25. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கடைசியாக 2017 ஜூனில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார் அஸ்வின். 35 வயது அஸ்வின் 2010 முதல் இதுவரை 113 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் விளையாடிய இரு ஆட்டங்களிலும் 1/53, 0/68 என அஸ்வின் பந்துவீசியிருப்பது விமர்சனங்களை வரவழைத்துள்ளது.

இந்நிலையில் அஸ்வின் மற்றும் இந்திய அணி பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், “இஷாந்த் சர்மாவும் அஸ்வினும் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். அஸ்வின் அபாரமான சுழற்பந்து வீச்சாளர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் வேறு வீரர்களை இந்திய அணி பார்க்க வேண்டும். பந்தை உள்ளேயும் வெளியேயும் கொண்டு செல்லும் பந்துவீச்சாளர் இருந்தால் நன்று. 

குல்தீப் யாதவ், சஹாலிடம் நாம் ஏன் திரும்பச் செல்லக் கூடாது? இந்தியாவுக்குப் பல ஆட்டங்களில் வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார்கள். அவர்களை மீண்டும் தேர்வு செய்தால் நல்லது. 

அஸ்வினும் சஹாலும் தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடினார்கள். அதிக வாய்ப்புகளை இருவரும் உருவாக்கவில்லை. அணுகுமுறையில் தற்காப்புடன் செயல்பட்டார்கள். பேட்டர் அருகில் ஃபீல்டர்களை நிற்கவைத்து அவர்கள் பந்துவீசியிருக்கலாம். ஆடுகளம் எப்படியிருந்தாலும் உலகக் கோப்பையில் விளையாடினால் நடு ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். எத்தகைய வாய்ப்புகளை உருவாக்கினீர்கள் என்றுதான் பார்க்கப்படும். 

ஒரே சமயத்தில் குல்தீப் யாதவும் சஹாலும் பந்துவீச வேண்டும். வருண் சக்ரவர்த்திக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம். உலகக் கோப்பைப் போட்டியில் 2,3 ஆட்டங்களில் வாய்ப்பு கொடுத்து, அவர் சரியில்லை என முடிவெடுத்து விட்டீர்கள். குல்தீப், சஹால் ஒன்றாக விளையாடியபோது நடு ஓவர்களில் நிறைய விக்கெட்டுகளை எடுத்தார்கள். அவர்களை மீண்டும் கொண்டு வரலாம். அல்லது வேறொரு வீரரையும் தேர்வு செய்யலாம். நடு ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டால் வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை