விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து காலிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அபிஜீத் தோமர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான சச்சின் யாதவ் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அபிஜீத்துடன் இணைந்த மஹிபால் லாம்ரோரும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஜீத் தோமர் தனது சதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் மஹிபால் லாம்ரோரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 150 ரன்களைத் தாண்டியது.
அதன்பின் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்த நிலையில் மஹிபால் லாம்ரோர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் தீபக் ஹூடாவும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 111 ரன்களில் அபிஜீத் தோமரும் விக்கெட்டை இழந்த நிலையி, அடுத்து களமிறங்கிய வீரர்களில் கார்த்திக் சர்மா 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணியில் துஷார் ரஹேஜா 11 ரன்களிலும், பூபதி குமார் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஜெகதீசன் மற்றும் இந்திரஜித் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜெகதீசன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்திய நிலையில், 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 37 ரன்களில் இந்திரஜித்தும் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதையடுத்து இணைந்த விஜய் சங்கர் மற்றும் முகமது அலியும் ஓரளவு தாக்குப்பிடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினர். இதில் முகமது அலி 34 ரன்களுக்கும், அரைசதத்தை நெருங்கிய விஜய் சங்கர் 49 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் தாமிழ்நாடு அணி 47.1 ஓவர்களில் 248 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.