டிஎன்பிஎல் 2021 : நாளை முதல் தொடங்கும் பிளே ஆஃப் போட்டிகள்; இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்?

Updated: Mon, Aug 09 2021 10:40 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் தொடங்கிய தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் தாற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கரோனா பரவல் அச்சுறுத்தலால் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இத்தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. 

இந்த லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகளும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோதியது. அதன்படி லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள. 

இதில் ரூபி திருச்சி வாரியரஸ் அணி 10 புள்ளியுடன் முதல் இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 புள்ளியுடன் 2ஆவது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 8 புள்ளியுடன் 3ஆவது இடத்தையும், லைகா கோவை கிங்ஸ் 7 புள்ளியுடன் 4ஆவது இடத்தையும் பிடித்து ‘பிளேஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதையடுத்து நாளை முதல் தொடங்கும் பிளே ஆஃப் போட்டிகளுக்கா இந்த நான்கு அணிகளும் தயாராகி வருகின்றன. அதன்படி நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் விளையாடும். 

அதேசமயம் நாளை மறுநாள் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் 3ஆம் இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், 4ஆம் இடம் பிடித்த லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1 சுற்றில் தோல்வியடைந்த அணியுடன் மோதும். 

மேலும் இத்தொடரின் இறுதிப் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை