டிஎன்பிஎல் 2022: சப்போர்ட் இல்லனாலும் சதமடித்த முரளி விஜய்; திருச்சியை வீழ்த்தியது நெல்லை!

Updated: Fri, Jul 15 2022 22:49 IST
Image Source: Google

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸும், ரூபி திருச்சி வாரியர்ஸும் ஆடிவருகின்றன.

கோயம்பத்தூரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் நிரஞ்சன் 5 ரன்னிலும், சூர்யபிரகாஷ் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 29 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது நெல்லை அணி.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பாபா அபரஜித் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். இருவரும் இணைந்து திருச்சி அணியின் பவுலிங்கை பொளந்துகட்டினர். அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் சதமடித்தார். 55 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார்.

பாபா அபரஜித் 48 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்தார். 92 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தும் கூட அபரஜித்தால் சதத்தை எட்ட முடியவில்லை.

சஞ்சய் யாதவ் மற்றும் அபரஜித் ஆகிய இருவரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 236 ரன்களை குவித்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி, 237 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய திருச்சி அணியில் முரளி விஜய் ஆரம்பமே அதிரடியில் மிரட்டி முதல் ஓவரிலேயே 22 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் இரண்டாவது ஓவரில் 18 ரன்கள் என காட்டடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

இதனால் 3.3 ஓவர்களிலேயே திருச்சி அணி 50 ரன்களைக் கடந்து அசத்தியது. மேலும் இலக்கை எளிதாக எட்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் ஒரு முனையில் முரளி விஜய் தொடர்ந்து அபாரமாக விளையாட, மறுமுனையில் இருந்த சந்தோஷ் ஷிவ் 7 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து வந்த அமித் சாத்விக் முதல் பந்தையே சிக்சருக்கு விளாச முயற்சித்து விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் 18 பந்துகளில் முரளி விஜய் அரைசதம் கடந்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ராஜகோபால், கனேஷ், அந்தோனி தாஸ், கோகுல் மூர்த்தி என அனைவரும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார்.

சீட்டுக்கட்டாய் விக்கெட்டுகள் சரிவு, காயத்தால் நடக்க முடியாத நிலையிலும் மனம் தளராத முரளி விஜய்  57 பந்துகளில் சதமடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே சேர்க்கமுடிந்தது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முரளி விஜய், 66 பந்துகளில் 12 சிக்சர், 7 பவுண்டரிகள் என 121 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் 66 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::