டிஎன்பிஎல் 2022: ராஜகோபால் அதிரடியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Fri, Jun 24 2022 22:56 IST
Image Source: Twitter

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் நேற்று(ஜூன்23) தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸும் ரூபி திருச்சி வாரியர்ஸும் விளையாடின. நெல்லையில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள் பேட்டிங் மந்தமாக ஆடினர். தொடக்க வீரர் ஏஜி பிரதீப் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஹரி நிஷாந்த் 15 பந்தில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் விஷால் வைத்யா (16), ஹரிஹரன்(8), விவேக்(6) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். திண்டுக்கல் வீரர்கள் அதிகமான டாட் பந்துகளை விட்டனர். மோனிஷ் 24 ரன்கள் அடித்தார். எல்.விக்னேஷ் 20வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாச, 20 ஓவரில் 144ரன்கள் அடித்து, 145 ரன்கள் என்ற சவாலான இலக்கை திருச்சி வாரியர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இன்னிங்ஸில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 53 பந்துகளில் ரன்னே அடிக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் 53 டாட்பந்துகள் என்பது படுமோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறது. ஆனால் 53 டாட் பந்துகள் இருந்தும் கூட, நிஷாந்த்தின் அதிரடியான தொடக்கம் மற்றும் எல்.விக்னேஷின் ஃபினிஷிங் ஆகியவற்றால் 20 ஓவரில் 144 ரன்கள் அடித்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய திருச்சி வாரியர்ஸ் அணிக்கு முரளி விஜய் - அமித் சாத்விக் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சாத்விக் 20 ரன்களில் ஆட்டமிழக்க, முரளி விஜய் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ராஜகோபால் - ஆதித்யா கனேஷ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் நிதீஷ் ராஜகோபால் அரைசதம் கடந்தார். 

இதன்மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை