டிஎன்பிஎல் 2023 எலிமினேட்டர்: மதுரையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெல்லை ராயல் கிங்ஸ்!

Updated: Sat, Jul 08 2023 23:42 IST
TNPL 2023 Eliminator: Nellai won by 4 runs against Madurai (Image Source: Google)

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நெல்லை அணிக்கு அருண் கார்த்திக் - சூர்யபிரகாஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சூர்யபிரகாஷ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான அருண் கார்த்திக்கும் 18 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த அஜித்தேஷ் குருஸ்வாமி - நிதிஷ் ராஜகோபால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் அரைசதம் கடந்த கையோடு குருஸ்வாமி 50 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய சோனு யாதவும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிதிஷ் ராஜகோபால் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவருக்கு துணையாக விளையாடிய ரித்திக் ஈஸ்வரன் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு சுரேஷ் லோகெஷ்வர் - ஹரி நிஷாந்த் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் ஹரி நிஷாந்த் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த லோகேஷ்வர் - ஆதித்யா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.  இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ்வர் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் ஆதித்யா அரைசதம் கடந்து அசத்தினார். 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஆதித்யா 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 73 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 33 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் ஏற்பட்டது.

அப்போது 4ஆவது விக்கெட்டாக களமிறங்கிய ஸ்வப்நில் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை இலக்கை நோக்கி எடுத்த சென்ற போது 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 48 ரனல் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து முக்கியமான தருணத்தில் பெவிலியன் திரும்பினார். இதனால் மதுரை அணிக்கு கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

அடுத்து களமிறங்கிய சரவணன் சிக்சர் அடித்து அசத்த, கடைசி பந்தில் அவரால் ஒரு ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது.  இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணியால் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பாண்டு டிஎன்பில் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் லீக் சுற்றுக்கு முன்னேறியது. அதேசமயம் மதுரை பாந்தர்ஸ் அணி டிஎன்பில் தொடரிலிருந்து வெளியேறியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை