டிஎன்பிஎல் 2023 இறுதிப்போட்டி: நெல்லையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கோவை!
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுஜய் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சச்சினும் 12 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் வாரியர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த சுரேஷ் குமார் - முகிலேஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுரேஷ் குமார் அரைசதம் கடந்தார். பின் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்திருந்த சுரேஷ் குமாரின் விக்கெட்டை சோனு யாதவ் கைப்பற்றினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான் வெறும் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் முகிலேஷுடன் இணைந்த ஆதீக் உர் ரஹ்மான் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் அடுத்த பந்திலேயே அடிக்க முயன்ற அதீக் உர் ரஹ்மான் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 50 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த முகிலேஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது. நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணிக்கு தொடக்கமே பேரதிச்சியாக ஸ்ரீ நெரஞ்சன் ரன்கள் ஏதுமின்றியு, அஜித்தேஷ் குருஸ்வாமி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதன்பின் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த அருண் கார்த்திக் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஷாரூக் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து நிதீஷ் ராஜகோபால் 13, சூர்யபிரகாஷ் 22, ஈஸ்வரன் 4, சோனு யாதவ், ஹரிஷ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நெல்லை ராயல் கிங்ஸ் அணி 15 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆல வுட்டானது. கோவை அணி தரப்பில் சுப்ரமணியன் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஷாருக் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.