டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர் 2: குருஸ்வாமி, ஈஸ்வரன் அதிரடியில் இறுதிப்போட்டிகுள் நுழைந்தது நெல்லை ராயல் கிங்ஸ்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்த்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் விமல் குமார் - ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விமல் குமார் 16 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய ஷிவம் சிங்குடன் இணைந்த பூபதி குமாரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் சிங் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூபதி குமார் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அத்பின் களமிறங்கிய ஆதித்யா கணேஷும் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதுவரை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிவம் சிங்கும் 6 சிக்சர், 4 பவுண்டரிகள் என 76 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் நடத்திர வீரர் பாபா இந்திரஜித் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணிக்கு அருண் கார்த்திக் - சுகேந்திரன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அருண் கார்த்திக் 26 ரன்களிலும், சுகேந்திரன் 22 ரன்களிலும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் களமிறங்கிய நிதீஷ் ராஜகோபாலும் 26 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் 3ஆம் விக்கெட்டிற்கு களமிறங்கிய அஜித்தேஷ் குருஸ்வாமி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். அவருக்கு துணையாக விளையடிய ரித்திக் ஈஸ்வரனும் சிக்சர்களாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஜித்தேஷ் குருஸ்வாமி 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 73 ரன்களையும், ரித்திக் ஈஸ்வரன் 11 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி 39 ரன்களைச் சேர்த்ததுடன் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார். இதன்மூல் நெல்லை ராயல் கிஸ்ங் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது அசத்தியது.
இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதையடுத்து ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்த்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.