டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய திருச்சி அணியில் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து சரண் 5 ரன்களுக்கும், ஃபிரான்சிஸ் ரோகின்ஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய மணி பாராதி ஓரளவு தாக்குப்பிடித்து 3 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 18.5 ஓவர்களிலேயே திருச்சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் - ஹரி நிஷாந்த் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹரி நிஷாந்த் 11 ரன்களிலும், அடுத்து வந்த ஜெகதீஷன் கௌசிக் 19 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த சுரேஷும் 32 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்வப்நில் சிங் - வாஷிங்டன் சுந்தர் இணை இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.