தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அணியின் தொடக்க வீரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த முகமது வசீம் - ஷ்யாம் சுந்தர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்யாம் சுந்தர் 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் தொடந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது வசீம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். மேற்கொண்டு அவருடன் இணைந்த சஞ்சய் யாதவும் அபாரமாக விளையாட இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ்வும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களைக் குவித்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த வசீம் அஹ்மத் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 90 ரன்களையும், சஞ்சய் யாதவ் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான் ஃபினிஷிங்கை கொடுத்தனர். மதுரை அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மதுரை பாந்தர்ஸ் அணி விளையடியது.
அதன்படி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியில் சுரேஷ் லோகஷ்வர் 7 ரன்களிலும், ஜெகதீசன் கௌசிக் ஒரு ரன்னிலும், சதுர்வேத் 7 ரன்களிலும், அக்ரம் கான் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அணியின் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ஹரி நிஷந்த 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஸ்வப்நில் சிங் - சசிதேவ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 33 ரன்கள் பார்ட்னர்ஷுப்பும் அமைத்தனர்.
பின்னர் 17 ரன்களில் சசிதேவ் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 18 ரன்கள் எடுத்திருந்த ஸ்வப்நில் சிங்கும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாத காரணத்தால் மதுரை பாந்தர்ஸ் அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திருச்சி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஞ்சய் யாதவ், ராஜ்குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.