ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு சந்தோஷ் குமார் மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்தோஷ் குமார் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித்தும் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க சூப்பர் கில்லீஸ் அணி 31 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜெகதீசனுடன் இணைந்த பிரதோஷ் ரஞ்சன் பால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய டேரில் ஃபெராரியோ 4 ரன்களிலும், அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த்தும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களிலும், அபிஷேக் தன்வர் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்களைக் குவித்ததுடன் அணிக்கு தேவையான ஃபினிஷிங்கையும் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறக்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ராதாகிருஷ்ணன் 15 ரன்களுக்கும், அவரைத்தொடர்ந்து துஷார் ரஹேஜா 20 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய கணேஷ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய அமித் சாத்விக் 14 ரன்களுக்கும், பாலச்சந்தர் அனிருத் 7 ரன்களிலும்ம், முகமது அலி 12 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கனேஷ் அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் கனேஷன் பெரியசாமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார்.