ரசிகர்களின் பேராதரவுடன் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு லைகா கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு விமல் குமார் - ஷிவம் சிங் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷிவம் சிங் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய விமல் குமார் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த நட்சத்திர வீரர்கள் பாபா இந்திரஜித் 6 ரன்களுக்கும், பூபதி குமார் 7 ரன்களுக்கும், சரத் குமார் 9 ரன்களுக்கும் தினேஷ் ராஜ் ஒரு ரன்னிலும், வருன் சக்ரவர்த்தி 9 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

Advertisement

இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 96 ரன்களிலேயே 6 விகெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த ஷிவம் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு அவருடன் இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் நிதானமாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது.  பின்னர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஷிவம் சிங் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விகெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சுபோத் பாட்டியும் 5 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 

பின்னர் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினும் 15 ரன்களுக்கு நடையைக் கட்ட, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி தரப்பில் சோனு யாத 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணிக்கு அருண் கார்த்திக் - சூர்யபிரகாஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சூர்யபிரகாஷ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

பின்னர் அருண் கார்த்திக்குடன் இணைந்த அஜித்தேஷ் குருஸ்வாமி அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அருண் கார்த்திக் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதீஷ் ராஜகோபால் ரன்கள் ஏதுமின்றியும், ரித்திக் ஈஸ்வரன் 2 ரன்களுக்கும், சோனு யாதவ் 15 ரன்களுக்கும், ஹரிஷ் 22 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஜித்தேஷ் குருஸ்வாமி 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜித்தேஷ் குருஸ்வாமி ஆட்டநாயகன் விருதை வென்ரார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News