TNPL 2024: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியானது 7 ஓவர்களாக குறைக்கப்பட்டம் ஆட்டம் தொடங்கியது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஷிவம் சிங் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷிவம் சிங் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பூபதி குமார் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோரும் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய விமல் குமார் 12 ரன்னிலும், சுபோத் பாட்டி 3 ரன்களுக்கும், சரத் குமார் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமிளித்தாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 7 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களைச் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அபிஷேக் தன்வர், பெரியஸ்வாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிலும் தொடக்க வீரர் சந்தோஷ் குமார் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜெகதீசன் - கேப்டன் பாபா அபாரஜித் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளியும், சிக்ஸர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெகதீசன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 32 ரன்களையும், அபாரஜித் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 4.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியது.