டிஎன்பிஎல் 2025: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வினுக்கு அபராதம்!

Updated: Tue, Jun 10 2025 12:59 IST
Image Source: Google

திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது லீக் போட்டி ஜூன் 8ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்திருந்த்து. 

இப்போட்டியின் போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை வீசிய சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். ஆனால், அந்த பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாகத் தெரிந்ததால், அஸ்வின் நடுவரின் முடிவில் அதிருப்தியாகி, கள நடுவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இருப்பினும் டிராகன்ஸ் அணி ஏற்கெனவே இரண்டு மேல்முறையீட்டு வாய்ப்பையும் இழந்திருந்தது.

இதனால் ரவிச்சந்திரன் அஸ்வினால் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியவில்லை. இதனால் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்ற அஸ்வின், பெவிலியன் திரும்பும் போது பேட்டால் தனது பேடில் பலமாக தாக்கியதுடன், பெவிலியனுக்கு சென்று தனது கிளவுஸையும் கழற்றி வீசினார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி விமர்சனங்களையும் எதிர்கொண்டது. 

இந்நிலையில் டிஎன்பிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதில் கள நடுவரின் முடிவுக்கு அஸ்வின் மறுப்பு தெரிவித்ததற்காக 10 சதவீதமும், ஆட்டமிழந்த பிறகு பெவிலியன் செல்லும்ம் போது உபகரணங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக 20 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்பதையும் டிஎன்பிஎல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்தாண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், அதன்பின் ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் போன்று லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை