ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை, நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு!
ICC Womens ODI World cup Squad: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளன.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை சமீபத்தில் அறிவித்தது. இதில் பாகிஸ்தான் மகளிர் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு அணியும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது நியூசிலாந்து மகளிர் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அணியின் கேப்டனாக சோஃபி டிவைன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள இளம் வீராங்கனை ஃப்ளோரா டெவான்ஷைர் அறிமுக வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர சூஸி பேட்ஸ், அமிலி கெர், மேடி க்ரீன், லியா தஹுஹு, போலி இங்கிலிஸ், ஜார்ஜியா பிளிம்மர், ப்ரூக் ஹாலிடே உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் இலங்கை கிரிக்கெட் வாரியமும் அந்நாட்டு அணியை அறிவித்துள்ளது. அணியின் கேப்டனாக சமாரி அத்தபத்து தொடரும் நிலையில், ஹர்ஷிதா சமரவிக்ரமா, நிலாக்ஷிகா சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி உள்ளிட்ட அனுபவ வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுடம் இளம் வீராங்கனைகளான விஸ்மி குணரத்னே, டெவ்மி விஹாங்கா, மல்கி மதாரா அகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கவிஷா தில்ஹாரி, இமேஷா துலானி, இனோஷி ஃபெர்னாண்டோ ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து மகளிர் அணி: சோஃபி டிவைன் (கேப்டன்), சுஸி பேட்ஸ், ஈடன் கார்சன், ஃப்ளோரா டெவன்ஷயர், இஸி கேஸ், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, ப்ரீ இல்லிங், பாலி இங்கிலிஸ், பெல்லா ஜேம்ஸ், மெலி கெர், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், ஜார்ஜியா பிளிம்மர், லியா தஹுஹு
Also Read: LIVE Cricket Score
இலங்கை மகளிர் அணி: சமாரி அத்தபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நீலாக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, இமேஷா துலானி, தேவமி விஹங்கா, பியூமி வத்சலா, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோதனி, மல்கி மதரா, அச்சினி குல்சூர்யா