ENG vs IND, 2nd ODI: டாப்லி வேகத்தில் வீழ்ந்த இந்தியா; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதல் போட்டியில் காயத்தால் ஆடாத விராட் கோலி இந்த போட்டியில் விளையாடினார்..
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய்(23) மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் (38) ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ராயை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.
அதன்பின்னர் பேர்ஸ்டோ, ரூட்(11), ஸ்டோக்ஸ்(21) ஆகிய மூவரையும் யுஸ்வேந்திர சாஹல் வீழ்த்தினார். கேப்டன் ஜோஸ் பட்லர் 4 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டோன் 33 ரன்னில் ஆட்டமிழக்க, 148 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. அதன்பின்னர் மொயின் அலியும் டேவிட் வில்லியும் சிறப்பாக பேட்டிங் ஆடினர்.
இவர்கள் இருவரும் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர். மொயின் அலியை 47 ரன்களுக்கு சாஹல் வீழ்த்த, டேவிட் வில்லியை 41 ரன்களுக்கு பும்ரா வீழ்த்தினார். 49 ஓவரில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
247 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா ரன்னே அடிக்காமலும், தவான் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பந்த் டக் அவுட்டானார். நல்ல ஷாட்டுகள் ஆடி நன்றாக தொடங்கிய விராட் கோலி, 16 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டுமொரு முறை ஏமாற்றினார்.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அவர்களது இன்னிங்ஸை நன்றாக தொடங்கினர். ஆனால் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. சூர்யகுமார் 27 ரன்களும், பாண்டியா மற்றும் ஜடேஜா தலா 29 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.
ஷமி 23 ரன்கள் அடித்தார். இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 38.5 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரீஸ் டாப்ளி, 9.5 ஓவர்கள் பந்துவீசி வெறும் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 1-1 என ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.