நடந்ததை ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது - டேவிட் மில்லர்!

பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று முடிந்தது . இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலியின் அரைசதத்தின் மூலமும், அக்ஸர் படேலின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும், அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கேசவ் மஹாராஜ் மற்றும் ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் குயின்டன் டி காக் 39 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 52 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 21 ரன்களுக்கு என விக்கெட்டுகளை இழந்த காரணத்தால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் டேவிட் மில்லர் பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவின் அபாராமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அந்த கேட்ச் தான் இந்த போட்டியின் முடிவையும் மாற்றியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து டேவிட் மில்லர் மௌனம் கலைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், “இந்த தோல்வியின் மூலம் நான் நொந்து போனேன்!! கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது. நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனக்குத் தெரிந்த ஒன்று, இந்த யூனிட்டைப் பற்றி நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதுதான்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்த பயணம் நம்பமுடியாத ஒன்றாக இருந்தது, மாதம் முழுவதும் உயர்வும் தாழ்வும் இருந்தது. நாங்கள் வலியை சகித்துக் கொண்டோம், ஆனால் இந்த தோல்வி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து சிறப்பாக எங்களது விளையாட்டை கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார். டேவிட் மில்லரின் இந்த பதிவை பார்த்த சிலர் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளதாக தவாறாக நினைத்து வருவது குறிப்பிடத்தக்கது.