உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது - ஹர்திக் பாண்டியா உருக்கம்!
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா ஏழு போட்டிகளில் விளையாடி ஏழிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. இந்த சூழலில் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் ஹர்திக் பாண்டியா அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பாண்டியா வங்கதேச அணியுடனான மூன்றாவது போட்டியில் பந்துவீசும் போது கணும்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் காயத்தால் மைதானத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா பாதியிலேயே வெளியேறினார். அடுத்தடுத்த போட்டிகளில் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் காயம் தொடர்ந்து அச்சுருத்திவருவதாக ஹர்திக் பாண்டியா தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். அதற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இந்திய அணியின் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் இணைந்தாலும் பிளே லெவனிலில் இடம் கிடைப்பது சந்தேகமே. உள்நாட்டில் உலகக் கோப்பையை வெல்வதே தன்னுடைய லட்சியம் என்றும், அதற்காகவே கடுமையாக உழைத்து மீண்டு வந்ததாகவும் ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார். தற்பொழுது அவர் உலக கோப்பைத் தொடரில் விளையாட முடியாமல் போனது அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
இந்நிலையில், உலக கோப்பையில் இருந்து விலகியது தொடர்பாக ஹர்திக் பாண்டியா எக்ஸ் (X) தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், உலக கோப்பையின் எஞ்சிய பகுதியை நான் இழக்க நேரிடும் என்ற உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் அவர்களை உற்சாகப்படுத்தி, உற்சாகத்துடன், அணியுடன் இருப்பேன். நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.