இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்!

Updated: Fri, Sep 20 2024 09:39 IST
Image Source: Google

 

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். அவருக்கு துணையாக விளையாடிய வில் ஜேக்ஸும் 62 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதேசமயம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட்டும் 95 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேப்டம் ஹாரி புரூக் 39 ரன்னும், ஜேமி ஸ்மித் 23 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 35 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 315 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா, மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து, 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் மார்ஷ் 10 ரன்னிலும், ஸ்மித், கேமரூன் கிரீன் தலா 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே இருவரும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிராவிஸ் ஹெட் 154 ரன்களையும், மார்னஸ் லபுஷாக்னே 77 ரன்களையும்ச் ஏர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 44 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

மேலும் இப்போட்டியில் அபாரமாக விளையாடி சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் 150 ரன்களை கடந்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை 150 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஹெட் பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட் 152 ரன்களை எடுத்திருந்தார். அதேசமயம் சர்வதேச அளவில் ஒரு அணிக்கு எதிராக அதிகமுறை 150 ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியளிலும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியளில் இந்திய வீரர் ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மூன்று முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை