விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் டிராவிஸ் ஹெட்!

Updated: Tue, Jun 10 2025 12:27 IST
Image Source: Google

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதற்காக இரு அணி வீரகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் ஐசிசி இறுதிப்போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்த்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை டிராவிஸ் ஹெட் முறியடிக்கவுள்ளார். 

விராட் கோலி இதுவரை 9 ஐசிசி இறுதிப் போட்டிகளில் விளையாடி 411 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம், டிராவிஸ் ஹெட் 3 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி 318 ரன்களை எடுத்துள்ளார். அதிலும் அந்த மூன்று முறையும் அவர் இந்தியாவுக்கு எதிராக மட்டுமே இந்த ரன்களை எடுத்துள்ளார். இதில் இரண்டு மறக்கமுடியாத சதங்கள் அடங்கும், ஒன்று கடந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, மற்றொன்று 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆகும்.

இதன்மூலம் ஐசிசி இறுதிப் போட்டிகளில் டிராவிஸ் ஹெட்டின் சராசரி 100க்கு மேல் உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட் 94 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், ஐசிசி தொடரின் இறுதிப்போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் எனும் விர்ட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐசிசி இறுதிப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

  • விராட் கோலி (இந்தியா) – 411
  • ரோஹித் சர்மா (இந்தியா) – 322
  • குமார் சங்கக்காரா (இலங்கை) – 320
  • டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) – 318
  • மகேலா ஜெயவர்தனே (இலங்கை) – 270

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணிகள்

தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன்.

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை