SCO vs AUS, 1st T20I: ஸ்காட்லாந்தை பந்தாடிய டிராவிஸ் ஹெட்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணியானது வரலாற்றில் முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் உள்ள கிரேஞ்ச் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஸ்காட்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி மற்றும் ஒல்லி ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஒல்லி ஹாரிஸ் 6 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜ் முன்ஸி 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் 19 ரன்களையும், கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 23 ரன்களிலும், மேத்யூ கிராஸ் 27 ரன்களிலும் என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் மார்க் வாட் 16 ரன்களையும், ஜேக் ஜார்விஸ் 10 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணியானது 9 இக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சீன் அபோட் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா மற்றும் ஸேவியர் பார்ட்லெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் டிராவிஸ் ஹெட்டுடன் கேப்டன் மிட்செல் மார்ஷ் இணைந்தார். இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசியதுடன் 17 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் மிட்செல் மார்ஷும் அதிரடியாக விளையாட ஆஸ்திரேலிய அணியானது முதல் 6 ஓவர்களில் 113 ரன்களைச் சேர்த்து மிரட்டியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத்தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்டும் 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 80 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோஷ் இங்க்லிஸ் 27 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 8 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 9.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.