சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராக எங்களுக்கு உதவும் - கேன் வில்லியம்சன்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 150 ரன்களையும், வியான் முல்டர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 64 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓரூர்க் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - கேன் வில்லியம்சன் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் டெவான் கான்வே 97 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், மறுபக்கம் அபாரமாக விளையாடிய கேன் வில்லியம்சன் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 133 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தனது ஃபார்ம் குறித்து பேசிய வில்லியம்சன், “இப்போட்டிக்கான சூழ்நிலை சிறப்பாக இருந்தது. இன்றைய போட்டி எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை எட்டிய நிலையில், நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது சற்று ஏமாற்றமாக இருந்தது.
அதன்பின் இந்த இலக்கை துரத்த நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. மேலும் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாங்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி உள்ளது. அதனால் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விஷயங்கள் தேவை. அந்தவகையில் இப்போட்டி முன்கூட்டியே தொடங்கியது, அதற்கு வெவ்வேறு தயாரிப்புகள் தேவைப்பட்டது. இது அனைத்தும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராக எங்களுக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக இப்போட்டியில் சதமடித்து அசத்திய கேன் வில்லியம்சன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் விராட் கோலியின் சாதனையையும் கேன் வில்லியம்சன் முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.