யு19 உலகக்கோப்பை 2024 இறுதிப்போட்டி: இந்தியாவிற்கு 254 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய அண்டார் 19 அணி பலப்பரீட்சை நடத்திவருகிறது. பெனோனி நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அந்த அணிக்கு தொடக்கம் கொடுக்க ஹாரி டிக்ஸன் - சாம் கான்ஸ்டாஸ் இணை களமிறங்கினர். இதில் கான்ஸ்டாஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஹாரி டிக்ஸனுடன் இணைந்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின்னர் இப்போட்டியில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெய்ப்ஜென் 48 ரன்களிலும், ஹாரி டிக்ஸர் 45 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இப்போட்டியில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அணிக்கு உதவினார்.
அதேசமயம் மறுபக்கம் 20 ரன்கள் எடுத்திருந்த ரியான் ஹிக்ஸ் தனது விக்கெட்டை இழக்க, 3 பவுண்டரி, 3 சிச்கர்கள் என 55 ரன்களைச் சேர்த்திருந்த ஹர்ஜாஸ் சிங்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத்தொடர்ந்து வந்த மெக்மில்லன், ஆண்டர்சன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆலிவர் பீக் 46 ரன்களைச் சேர்த்திருந்தார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அண்டர்19 அணி 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அண்டர் 19 அணி விளையாடவுள்ளது.