யு19 உலகக்கோப்பை 2024: நேபாளை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டம் ஒன்றில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து நேபாள் அண்டர் 19 அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நேபாள் அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதார்ஷ் சிங் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பிரியன்ஷு மொலியாவும் 19 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த் கேப்டன் உதர் சஹாரன் - சச்சின் தாஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இந்த இணையை பிரிக்க முடியாமல் நேபாள் அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் தாஸ் தனது சதத்தைப் பதிவுசெய்தார்.
இதன்மூலம் இருவரும் இணைந்த 4ஆவது விக்கெட்டிற்கு 215 ரன்கள் பார்ட்னஷிப் அமைந்த நிலையில் சச்சி தாஸ் 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 116 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் விளையாடிய கேப்டன் உதய் சஹாரனும் தனது சதத்தைப் பதிவுசெய்த கையோடு 100 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அண்டர் 19 அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணிக்கு தீபக் பொஹரா - அர்ஜுன் கமல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தீபக் பொஹரா 22 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அர்ஜுன் கமலும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் தேவ் கனல் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய உத்தம் தபா 8 ரன்களிலும், பிஷ்னி பிக்ரம் ஒரு ரன்னிலும், தீபக் தும்ரே ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தானர்.
அதன்பின் வந்த குல்சன் ஜா, திபெஷ் கந்தெல், சுபாஷ் பந்தாரி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, 33 ரன்களைச் சேர்த்திருந்த தேவ் கனெலும் விக்கெட்டை இழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் நேபாள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் சௌமி பாண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அண்டர் 19 அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.