யு19 உலகக்கோப்பை 2024: மீண்டும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மபகா; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Updated: Wed, Jan 31 2024 20:55 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி விளையாடிய ஜிம்பாப்வே அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இதில் ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில் ரோனக் படேல் 30 ரன்களையும், ரியான் கம்வெம்பா 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குவேனா மபகா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் பிரிட்டோரியஸ் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த ஸ்டீவ் ஸ்டோக் 37 ரன்களையும், டேவிட் டீகர் 10 ரன்களையும் சேர்க்க தென் ஆப்பிரிக்க அணி 13.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குவேனா மபகா இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியிலும் குவேனா மபகா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் நடப்பு ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியளில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை