யுஏஇ, ஓமனில் டி20 உலகக்கோப்பை - ஐசிசி
இந்தியாவில் வரும் அக்டோபா் - நவம்பா் காலகட்டத்தில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகியா நாடுகளுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
முன்னதாக, போட்டியை நடத்துவது தொடா்பாக பிசிசிஐக்கு 4 வாரகால அவகாசம் வழங்கியிருந்தது ஐசிசி. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படும் என ஊகிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் இத்தோடர் நடைபெறும் என்பதை ஐசிசி உறுதி செய்துள்ளது.
அதன்படி வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடர் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தகவலை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஐபிஎல் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதால், உலகக் கோப்பை போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்களை மஸ்கட்டில் நடத்தவும், அதற்குள்ளாக ஐபிஎல் போட்டிக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரக மைதானங்களை தயாா் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை ஐசிசி ஏற்கெனவே தொடங்கியும் உள்ளது.