UAE vs AFG, 1st T20I: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!

Updated: Fri, Dec 29 2023 23:09 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஸஸாய் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த குர்பாஸ் - கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 7 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 100 ரன்களில் குர்பாஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஸத்ரானும் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைக் குவித்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணியின் தொடக்க வீரர்கள் கேடன் முகமது வாசீம் 4 ரன்களிலும், காலித் ஷா ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய விருத்தியா அரவிந்த் ஒருமுனையில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினாலும், மறுபக்கம் வந்த சமல் 4 ரன்களுக்கும், பசில் ஹமீத் 18 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விருத்தியா அரவிந்த் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்கமால் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 70 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் ஐக்கிய அரபு அமீரக அணியால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை