UAE vs BAN, 3rd T20I: வ்ங்கதேசத்தை 162 ரன்களில் சுருட்டியது யுஏஇ!

Updated: Wed, May 21 2025 22:36 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன் இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் தன்ஸித்துடன் இணைந்த கேப்டன் லிட்டன் தாஸ் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் லிட்டன் தாஸ் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோய் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தன்ஸித் ஹசனும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்து கையோடு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் அந்த அணி 57 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய ஜக்கர் அலி ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். பின்னர் அதிரடியாக விளையாடிய ஜக்கர் அலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். இறுதியில் ஹசன் மஹ்மூத் 25 ரன்களையும், ஷொரிஃபுல் இஸ்லாம் 16 ரன்களையும் சேர்க்க வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. யுஏஇ அணி தரப்பில் ஹைதர் அலி 3 விக்கெட்டுகளையும், மதியுல்லா கான் மற்றும் சகிர் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை