UAE vs NZ, 1st T20I: டிம் சௌதீ அபார பந்துவீச்சு; யுஏஇ-யை வீழ்த்தியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்ற்ய் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சாத் பௌஸ் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாத் பௌஸ் ரன்கள் ஏதுமின்றியும், டேனெ கிளெவர் 4 விக்கெட்டுகளையும், மார்க் சாப்மேன் 15 ரன்களுக்கும், மிட்செல் சாண்ட்னர் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த டிம் செய்ஃபெர்ட் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் நீஷம் 25 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இறுதியில் கோல் மெக்கன்ஸி - ரச்சின் ரவீந்திரா இணை அதிரடியாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்த, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெக்கன்ஸி 31 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 21 ரன்களையும் சேர்த்தனர். யுஏஇ அணி தரப்பில் ஜுனைத் சித்திக், பசில் ஹமீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணியில் கேப்டன் முகமது வாசீம் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய விருத்தியா அரவிந்த் 13, ஆசிஃப் கான் 13, அன்ஷ் டண்டன் 12, பசில் ஹமீத் 5 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்யான்ஷ் சர்மா அரைசதம் கடந்து, 60 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 19.4 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் டிம் சௌதீ 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி, டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.