IRE vs IND: சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் உம்ரான், அர்ஷ்தீப்?

Updated: Sun, Jun 26 2022 14:53 IST
'Umran Malik Should Be In Indian Squad For T20 World Cup 2022', Says Former Indian Cricketer (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரினை அடுத்து தற்போது ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாட அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கேப்டனாக செயல்படவுள்ள ஹார்டிக் பாண்டியா குஜராத் அணியை போன்றே இந்திய அணியையும் சிறப்பாக வழிநடத்துவார் என்று அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று முதலாவது டி20 போட்டியும், அதற்கு அடுத்து ஜூன் 28ஆம் தேதி நாளை மறுநாள் இரண்டாவது டி20 போட்டியும் டப்ளின் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகளவு உள்ளது. ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் இதுவரை அறிமுகமாகாத வீரர்களாக உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகிய மூன்று வீரர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருந்த உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

இந்நிலையில் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலாவது புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற கேள்வி இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் எழுப்பப்பட்டது. 

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். இருந்தாலும் சிறந்த பிளேயிங் லெவனுடன் செல்ல வேண்டியது முக்கியம். சூழ்நிலையை பொருத்து இந்திய அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

நிச்சயம் இரண்டு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு இந்த தொடரில் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதோடு சிறந்த பிளேயிங் லெவனையும் நாங்கள் கொண்டு செல்வோம்.” என்று தெரிவித்துள்ளார். 

அவரது இந்தக் கருத்தின் காரணமாக நிச்சயமாக இந்த முதலாவது டி20 போட்டியில் உம்ரான் மாலிக் அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் ஒருவருக்கும், ராகுல் திரிப்பாதிக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை