உம்ரான் மாலிக்கிற்கு இன்னும் நேரம் வேண்டும் - முகமது ஷமி!
ஐபிஎல் 2022 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அதிவேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக். 11 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 150 கி.மீக்கு மேலான வேகத்தில் பந்துவீசும் இந்த ஜம்மு காஷ்மீர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நாடுகளை கடந்தும் பாராட்டுகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் உம்ரான் மாலிக் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இன்னும் கால அவகாசம் உள்ளதென இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷமி, “உம்ரான் மாலிக்கிடம் வேகம் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் தனிப்பட்ட முறையில் பேசுகையில், நான் வேகத்தின் பெரிய ரசிகன் அல்ல. உங்களால் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்துவீசி, பந்தை இருபுறமும் நகர்த்தவும், அதே போல் ரிவர்ஸ் (ஸ்விங்) செய்யவும் முடிந்தால், பேட்டர்களை தொந்தரவு செய்ய அது போதுமானது என்று நான் நம்புகிறேன்.
உம்ரான் மாலிக்கிடம் நம்பமுடியாத வேகம் உள்ளது, ஆனால் வேகத்தைத் தவிர என் கருத்தில் முதிர்ச்சியடைய அவருக்கு இன்னும் சிறிது நேரம் தேவை” என்று தெரிவித்தார்.