IND vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் முதல் (2019 – 2021) தொடரில் விராட் கோலி தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடமும், 2ஆவது தொடரில் (2021 – 2023) ரோஹித் சர்மா தலைமையில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடமும் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இதை தொடர்ந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பயணத்தில் முதலாவதாக வலுவான தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து தங்களுடைய சொந்த மண்ணில் வரும் ஜனவரி மாதம் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
கடைசியாக கடந்த 2012இல் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா அதன் பின் 11 வருடங்களாக சொந்த மண்ணில் உலகில் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வருகிறது. எனவே இம்முறையும் இந்தியா வெல்வதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்தாலும் அதற்கு இங்கிலாந்து மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது. அந்த வரிசையில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் உறுதியான நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் தங்களுடைய 16 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. பொதுவாக இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் அதில் அசத்துவதற்காக ஜேக் லீச், ரெஹன் அஹ்மத், சோயப் பசீர், டாம் ஹார்ட்லி ஆகிய 4 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்களை இங்கிலாந்து தேர்வு செய்துள்ளது. மேலும் இந்த அணியில் 41 வயதாகும் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் தேர்வாகி வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மார்க் வுட், கஸ் அட்கின்சன், ஒல்லி ராபின்சன் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஜோ ரூட், ஒல்லி போப், ஹரி ப்ரூக், ஜானி பேர்ஸ்டோவ், பென் போக்ஸ், ஒல்லி ராபின்சன், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ரெஹன் அகமத், சோயாப் பஷீர், கஸ் அட்கின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச்.