இலக்கை எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் - கிரேக் பிராத்வைட்!
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கின்ற இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி தொடரின் இறுதி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது அரை சதங்களாலும், விராட் கோலியின் சதத்தாலும் 438 ரன்கள் குவித்தது.
இதற்கடுத்து மிக மிக பொறுமையாக ஆமை வேகத்தில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 115.4 ஓவர்களில் 2.20 ரன் ரேட்டில் 255 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆமை வேக ஆட்டம் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் மழை பிரச்சனையை கொடுத்தது.
இந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 12.2 ஓவரில் 100 ரன்கள் தாண்டி உலகச் சாதனை படைத்து, இரண்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு மழையின் ஊடாக 76 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கு அடுத்து ஐந்தாவது நாளில் 98 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்க, வெற்றிக்கு 289 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் நிற்காமல் பெய்த மழை ஒரு பந்தை கூட வீச விடாமல் போட்டியை டிரா செய்தது.
போட்டியின் இந்த முடிவுக்கு பின்னால் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிரத்வெயிட் “நாங்கள் பாசிட்டிவாக இருந்தோம். ஒப்பிட்ட அளவில் நல்ல ஒரு ஆடுகளத்தில் எங்களுக்கு 98 ஓவர்கள் இருந்தது. எங்களால் சேஸ் செய்திருக்க முடியும். துரதிஷ்டவசமாக வானிலையின் காரணமாக எங்களுக்கு அந்த வாய்ப்பு அமையாமல் போய்விட்டது.
இந்தப் போட்டியில் கடந்த போட்டி போல் இல்லாமல் நாங்கள் பேட்டிங்கில் எங்களது சண்டையை வெளிப்படுத்தினோம். பவுலிங் வாரியாக எங்களால் ஒழுக்கமாக இருக்க முடியும். எங்கள் பேட்டர்கள் மீண்டும் நல்லபடியாக திரும்பி வந்தார்கள். நாங்கள் நான்காவது நாளில் ஐந்து விக்கெட்டுகளை இழந்தோம். அது சரியான ஒன்று அல்ல. ஆனால் எங்களுடைய முன்னணி பேட்ஸ்மேன்கள் 100 ஓவர்கள் மேல் விளையாடியது சிறப்பான ஒன்று.
இப்படியான சர்வதேச போட்டிகளுக்கு முன்பாக, வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சில முகாம்கள் சில பயிற்சி போட்டிகள் இருந்தால் நன்றாக இருக்கும். கூக்கபுரா பந்துகளை பயன்படுத்துவது தொடர்பாக தயாரிப்புகள் இருக்க வேண்டும். நல்ல அணிகளுக்கு எதிராக நீண்ட நேரம் பேட் செய்ய வேண்டியது முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.