முதல் ஓவரில் அதிக ரன்கள்; மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நெஹால் வதேரா அதிரடியாக விளையாடி 70 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த ஷஷாங்க் சிங் 59 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்களையும் வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையிலும் அந்த அணியின் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மோசமான சாதனையை படைத்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் இன்னிங்ஸின் முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்.
Also Read: LIVE Cricket Score
அதிலும் குறிப்பாக அந்த ஒரே ஓவரில் மட்டும் ஐந்து பவுண்டரிகள் அடித்து மொத்தமாக 22 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசும்போது அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் எனும் மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு கிளென் மேக்ஸ்வெல் இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசி 20 ரன்களை கொடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது அர்ஷ்தீப் சிங் அதனை முறியடித்துள்ளார்.