USA vs BAN, 3rd T20I: முஸ்தஃபிசூர், தன்ஸித் அசத்தல்; ஆறுதல் வெற்றிபெற்றது வங்கதேசம்!

Updated: Sun, May 26 2024 12:30 IST
Image Source: Google

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி20 போட்டிகளிலும் அமெரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அச்தியது. இதன் மூலம் வங்கதேச அணிக்கு எதிராக தங்களது முதல் முயற்சியிலேயே அமெரிக்க அணி டி20 தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேனான தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹஸ்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தனர். அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஆண்ட்ரிஸ் கஸ் மற்றும் ஷயான் ஜஹான்கீர் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் அதிரடியாக தொடங்கிய ஆண்ட்ரிஸ் கஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜாஹன்கீரும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் குமார் 3 ரன்களுக்கும், மிலந்த் குமார் 7 ரன்களுக்கும், கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் இரண்டு ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணியை நெருக்கடியில் தள்ளினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கோரி ஆண்டர்சன் - ஷாட்லி ஷால்க்விக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஷாட்லி 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களைச் சேர்த்த நிலையில் கோரி ஆண்டர்சனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 10 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சௌமீயா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி அணியின் வெற்றியை எளிதாக்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்ஸித் ஹசன் அரைசதம் கடந்து அசத்தினர். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தன்ஸித் ஹசன் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்தார். 

அவருக்கு துணையாக விளையாடிய சௌமீயா சர்க்கார் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 11.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்து ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இருப்பினும் அமெரிக்க அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை