சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறப்பு சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி!

Updated: Mon, Mar 03 2025 11:51 IST
Image Source: Google

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி நேற்று (மார்ச் 2) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் தனது அற்புதமான பந்துவீச்சின் மூலம் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

இப்போட்டியில்10 ஓவர்களை வீசிய வருண் சக்ரவர்த்தி 42 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் நியூசிலாந்தின் முக்கிய வீரர்களான வில் யங், கிளென் பிலிப், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் மற்றும் மாட் ஹென்றி ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அவரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினார். 

அதிவேக 5 விக்கெட்டுகள்

இதன்மூலம் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த போட்டிகளில் விளையாடி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பின்னி வங்கதேசத்திற்கு எதிரான தனது மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில், தற்போது வருண் சக்ரவர்த்தி தனது இரண்டாவது போட்டியில் அச்சாதனையை முறியடித்துள்ளார்.

மூன்றாவது இந்தியர்

இதுதவிர்த்து ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தனது அறிமுக போட்டியில் இந்தியாவுக்காக சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையையும் வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார். முன்னதாக 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜாவும், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முகமது ஷமியும் தங்களின் அறிமுக சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு லீக் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வருண் சக்ரவர்த்திக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்றைய கடைசி லீக் போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதை அடுத்து, வருண் சக்ரவர்த்தி பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் தனது திறனை வெளிப்படுத்தி அணியில் தனது இடத்தை உறுதிசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களும், அக்சர் படேல் 42 ரன்களும் எடுத்தனர்.நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர ரச்சின் ரவீந்திரன், கைல் ஜேமிசன், மிட்செல் சான்ட்னர், வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் 1-1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்ததுடன் 81 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அந்த அணியின் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை