பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன் - ஷாகிப் அல் ஹசன்!

Updated: Sat, Oct 07 2023 19:17 IST
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன் - ஷாகிப் அல் ஹசன்! (Image Source: Google)

நடப்பு ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வஙக்தேச அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியானது வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்களையும் இழந்து 156 ரன்களை மட்டுமே குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர்கள் குர்பாஸ் 47 ரன்களையும், இப்ராஹீம் மற்றும் அஸ்மதுல்லா 22 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பாக மெஹதி ஹாசன் மற்றும் நஜ்முல் ஷாண்டோ ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், “இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மைதானத்தில் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக கிடைத்தால் போட்டியை எங்களால் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தோம். அந்த வகையில் எங்களது அணியின் வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன்.

குறிப்பாக நாங்கள் ஏற்கனவே இங்கு வந்து பயிற்சியை மேற்கொண்டதால் இன்று எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது. இதுபோன்ற கடினமான மைதானங்களில் வெற்றி தேவை என்றால் சூழ்நிலையை நமக்கு ஏற்றார் போல் தகவமைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் அணியில் 3-4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த போட்டியிலும் மாற்றத்தை கொண்டு வரும் அளவிற்கு திறமையான வீரர்கள். 

இனிவரும் தொடர்களிலும் அவர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். அதேபோன்று மெஹதி ஹாசன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷாண்டோவும் சிறப்பாக விளையாடினார். அவர்கள் இருவருமே எப்போதுமே அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை