அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பிசிசிஐ ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது வியாகாம் 18!

Updated: Thu, Aug 31 2023 18:26 IST
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பிசிசிஐ ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது வியாகாம் 18! (Image Source: Google)

2012ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஹோம் மற்றும் அவே போட்டிகள், ஐபிஎல் தொடர், உள்ளூர் போட்டிகள் உள்ளிட்டவற்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ நிறுவனத்திடம் இழந்தது.

இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அணி 88 போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இதற்கான ஒளிபரப்பு உரிமைக்கான பிசிசிஐ ஏலம் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் டிஸ்னி ஸ்டார், சோனி, வியாகாம் 18 உள்ளிட்டவை களத்தில் இருந்தன. இதில் சோனி நிறுவனம் ஜீ நிறுவனத்துடன் கைகோர்த்ததால், ஏலத்தில் சுவாரஸ்யம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்திய அணி விளையாடவுள்ள 88 போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக ரூ.5,966.4 கோடிக்கு வியாகாம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் ரூ. 67.7 கோடி வழங்கப்படவுள்ளது. கடந்த முறை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தரப்பில் ரூ. 6,138 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒப்பந்தம் மதிப்பு குறைந்ததற்கு ஐசிசி தொடர்களின் எண்ணிக்கையும், ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் 2023 முதல் 2028 வரை இந்திய மண்ணில் இந்திய அணி விளையாடும் அத்தனை போட்டிகளையும் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவன தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா டிஜிட்டல் ஓடிடி செயலியிலும் காண முடியும்.

அதேபோல் 2023 முதல் 2028 வரையிலான ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமாஸ் ஓடிடியிலும் காண முடியும். அதேபோல் ஐசிசி 2024 முதல் 2027 வரையிலான ஐசிசி தொடர்களை ஜீ மற்றும் சோனி தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் காண முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை